பார்த்ததில் ரசித்தது
The Walk
சில திரைபடங்களை காண்பதற்கு முன்பு நமக்கு பல கேள்விகள் இருக்கும், இதை பார்க்கலாமா வேண்டாமா? பிறர் புகழ்வதற்கு ஏற்றார் போல் அத்தனை நன்றாக இருக்குமா? என்பன போல...!
இந்த படம் எனக்குள் அப்படி பல கேள்விகளை எழுப்ப தவறவில்லை, அதற்கு முக்கிய காரணம், கயிற்றின் மேல் நடக்கும் ஒருவர் பற்றிய கதை அதில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருந்துவிட போகின்றது என்கின்ற என்னுடைய புரிதல்தான், மிக சரியாக சொல்லவேண்டும் என்றால் , மிக தவறான புரிதல்.
நமது சிறுவயதில் நாம சிலமுறை circus சென்றிருப்போம், ரசித்திருப்போம் ஆனால் அந்த வாழ்வியலுக்குள் பயணிக்கும் எண்ணமும், தருணமும் நமக்கு வாய்த்திருக்காது, ஆனால் இந்த கதையின் நாயகன், கயிற்றில் மேல் நடக்கும் அவர்களது அசாத்திய திறமைகண்டு, தானே அதை சுயமாக கற்க முயல்கிறான், பின்பு என்ன, அவன் வாழ்க்கையாகவே அது மாற வீட்டின் எதிர்ப்பினால் வெளியேற்றப்படுகிறான், பின்பு அந்த circus நடந்தும் பெரியவரிடம் முறைப்படி கற்க, அவர்களுக்குள் ஏற்படும் சிறு மனவருத்தத்தால் அங்கிருந்தும் வெளியேறுகிறான், தெருவோரங்களில் வித்தை காட்டுபவனாக புது பரிமாணம் எடுக்கும் அவனுக்கு ஒரு பெண் தோழியும், கூடவே ஒரு லட்சிய கனவும் கிடைக்கிறது, அது அப்பொழுதுதான் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ட்வின் டவர் என்று அழைக்கப்படும் அமெரிக்கா வர்த்தக சபை கட்டிடம், உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்னும் பெருமைக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம்... இந்த இரண்டு கட்டிடங்களுக்கு நடுவே கயறுக்கட்டி அதில் நடக்க வேண்டும் என்பதையே தனக்குண்டான கனவாக மாற்றிக்கொண்டான்.
அந்த கனவில் அவன் எப்படி வெற்றிபெற்றான் என்பது மீதி கதை, இன்னும் தெளிவாக சொன்னால் அதுதான் அந்த படத்தின் கதை கரு, எனவே அதை நீங்கள் பார்த்து உணர உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்... ஒருவனது கனவு அவனை எந்த நிலையுளையும் அவனை போராட வைக்கும், அது எத்தனை ஆபத்தானதாக இருந்தாலும் சரி, அவனுக்கு அதில் இருக்கும் திருப்தி மட்டுமே பிரதானமானதாக இருக்கும், என்பதற்கு இப்படம் மிக சிறந்த உதாரணம், படத்தின் மிக சிறந்த தருணங்களில் ஒன்று எதிர்மறையான சிந்தனைகளை அவன் எப்போதுமே ஒதுக்கிவைத்தே செயல்படுவான், அதினாலே, இந்த படத்தின் ஆரம்பம் தொடங்கி, நாயகனின் நம்பிக்கை நமக்குள்ளும் சற்றே பூத்திருக்கும்,
ஒரு சாதாரண கயிற்றின்மேல் நடப்பவனின் கதையில் இதை சுவாரஸ்யங்களா...! என்று நம்மை வியக்கவைத்த இயக்குனருக்கும், திரைக்கதை வடிவமைப்பாளருக்கும் நிச்சயம் நாம் நம் பாராட்டை தந்தே ஆகவேண்டும், பில்லிப்ஆகவே வாழ்ந்துருக்கும் அந்த நாயகன், அவனுக்கு தோல்குடுக்கும் நண்பரகள் கூட்டம், அதனை அருமையான நடிகர் தேர்வென்றெ கூறவேண்டும், ஒவ்வொரு நொடியையும் ரசிக்கவைத்த பின்னிசை கோர்ப்பு, அக்கதையை கவிதையாய் மாற்றியது என்று சொன்னால் நிச்சயம் போய் அல்ல, அத்தனை தெளிவான நிழற்பட வடிவமைப்பு, ஒளிப்பதிவு, படத்தின் உணர்ச்சிகளை நம் கையில் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது,
இறுதி காட்சிகளில் கயிற்றோடு அவன் கொண்டுள்ள காதல், அத்தனை ரம்யமாக வெளிப்படுகிறது, கனவின் நிறைவேறும் தருணம், எந்த தடையும் இன்றி, இறுதியில் அதில் பயணிக்கும்போது ஏற்படும் வெற்றிக்களிப்பு, அத்தனையும் சுமந்து தன் நடிப்பின் மூலம் நம் மூலையில் சேர்க்கும், கதையின் நாயகன், கைது செய்து கீழேகொண்டு வரும் தருணங்களில், அவர் அனுபவிக்கும் அந்த பாராட்டுக்கள், அவரின் வெற்றியின் சத்தமாய் நம் காதுகளுக்குள் ஒலிக்க செய்கிறார் இயக்குனர்...
மொத்தத்தில் "தீ வால்க்" தன்னம்பிக்கையோடு கனவை நோக்கி ஓடும் ஒவ்வொரு மனிதனுக்கும், இன்னொரு நம்பியாகையாளனின் உண்மை கதையின் உத்வேகமாக அமையும்...
