Tuesday, 30 January 2024

கிளியோபாட்ரா - முகில்

புத்தகம் : 7

#நான்விஜய் 

ஒரு வரலாற்றை எப்படியெல்லாம் சொல்ல முடியும், தரவுகளை குறிப்பிட்டு ஒரு மொத்த புத்தகத்தையும் ஒரு குறிபேடு போல எழுதலாம், அல்லது முழுவதும் புனைவாக மாற்றலாம், அல்லது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிடலாம், அல்லது சேர்த்த தரவுகளை தொகுத்து சில தொகுதிகளாக வெளியிடலாம், இது போன்ற வழி முறைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு புரியும் அவர்கள் படிப்பார்கள், வரலாற்றின் மீது தீவிர தேடல் கொண்டவர்களுக்கு இது வாசப்படலாம் ஆனா ஒரு எளிய வாசகனுக்கு, ஆரம்பநிலை சரித்திர வாசகனுக்கு அது எப்படி எளிமையான ஒன்றாக இருக்கும்? எனில் இவர்களுக்கு புரியவைக்க அல்லது அந்த வரலாற்றை என் போன்ற எளிய வாசகனுக்கு கடத்த என்ன செய்ய வேண்டும்? அதற்கான எளிய விளக்க புத்தகம் தான் இந்த கிளியோபேட்ரா புத்தகம்.

Mugil Siva அண்ணனின் சில புத்தகங்கள் முதலிலேயே படித்த அனுபவத்தினால் இதிலும் அந்த எளிமை இருக்கும் என்ற நம்பிக்கையில் படிக்க தொடங்கினேன், என்னை சற்றும் ஏமாற்றாமல் அவரது பாணியில் மிக எளிதாக ஒரு எளிய நாவலை படிக்கும் வகைமையில் இந்த புத்தகத்தை எழுதி இருந்தார், இந்த லாவகம் எப்படித்தான் இவருக்கு இவ்வளவு எளிதாக அமைந்தது என்று பல முறை யோசித்ததுண்டு, ஒரு மொத்த வரலாற்றையும் அவரது எழுத்துக்களை ஒரு கற்பனைப்போல மனதில் ஒட்டினால் ஒரு அழகான திரைப்படம் பார்த்த அனுப்பவும் கிடைத்துவிடும்.. நிற்க இது வரலாற்று நூல் நாவல் கிடையாது, அப்படி இருக்க இது எப்படி சாத்தியம் என்று புரிய இந்த புத்தகத்தை அல்லது இதற்கு முன் அண்ணன் எழுதிய சந்திரபாபு வாழ்க்கை வரலாற்று நூலகளை கூட படியுங்கள்.

என் அப்பா அவரது மரணதிற்கு முன்பு புத்தகம் படிக்க தொடங்கி இருந்தார் அந்த 54 வயதில் அவருக்கு வாசிப்பின் மேல் ஈர்ப்பு வர காரணமே சந்திரபாபு பற்றி எழுதிய முகில் அண்ணனின் புத்தகம் தான், என்பது என் நினைவில் எப்போதும் நீங்க நினைவாக இருக்கும்,

இனி புத்தகத்தில் செல்வோம், சில வருடங்களுக்கு முன்பு கிளியோபாட்ரா மற்றும் சீசரை கொண்டு ஹாலிவுட்டில் ஒரு நகைச்சுவை படம் வந்தது ஆஸ்ட்ரிஸ் and ஓபிளிஸ் என்று அப்படித்தான் சீசறுக்கும் கிளியோபாட்ராவுக்கும் உள்ள உறவு எனக்கு தெரியவந்தது அதில் கூட இது வெறும் நகைச்சுவைக்கு எழுதி இருப்பார்கள் போல என்று நினைத்ததும் உண்டு, ஆனால் இந்த புத்தகம் படிக்கும் போது நான் தெரிந்துகொண்டேன் எப்படிப்பட்ட வீரன் எப்படிப்பட்ட காதல் என்று.

அதோடு நமக்கெல்லாம் மார்க் ஆண்டோனி என்றதும் நினைவுக்கு வருவது ரகுவரன் தான் இந்த தலைமுறைக்கு வேண்டுமானால் அது விஷாலாக இருக்கலாம், ஆனால் இந்த புத்தகத்தில் நான் பார்த்த மார்க் ஆண்டோனி பாஷாக்கலையெல்லாம் பாதுஷாவாக்கி சாப்பிட்டு கடைசியில் சரணடைந்த இடம் கிளியோபாட்ரா, பைபிள்ல் சாம்சன் என்கிற ஒரு கதாபாத்திரம் உண்டு அவனை விழுத்தவே முடியாது என்கிற வரம்பெற்றவன் அவன் வீரம் அவன் தலைமுடியில் இருக்குமாம், கடைசியில் ஒரு பெண்ணை கொண்டு அவனை வீழ்த்த எதிரிகள் முடிவு செய்து வெற்றியும் அடைவார்கள், மார்க் ஆண்டோனி எனக்கு அவரைதான் நியாபகப்படுத்தினார்,

கிளியோபாட்ரா எகிப்தின் இளவரசி, அப்பா மன்னர், நாட்டை ரோமுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டவர், ரோமின் படையோடு வந்து மீண்டும் எகிப்த்தை கைப்பற்றினார், தன் சொந்த மகளையே கொன்றார், பின்னர் சொந்த சகோதரனை மணந்து அரசியகிறார், பின்னால் அவனுக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடுகிறார் மீண்டும் ஜூலியஸ் சீசர் உதவியுடன் நாடு திரும்புகிறார், சீசரை காதலிக்கிறார், சீசறும் கொள்ளப்படுகிறார் அந்த இடத்தில் மார்க் ஆண்டோனி வருகிறார் பின்பு அவரோட காதல் திருமணம், இறுதியில் அவரது மரணம் பின்பு அகஸ்டஸ் வருகிறார் கிளியோபாட்ரா தற்கொலை செய்துகொள்கிறார்.. இவ்வளவு சுருக்கமான வரலாறு, ஒருவேளை கிளியோபாட்ரா என்கிற ஒருத்தி இல்லாமல் போய் இருந்தால் ரோமின் தலையெழுத்தே மாறி இருக்கும், ஷேக்ஸ்பியர்கு எழுத கதையே கிடைக்காமல் போய் இருக்கும், இப்படி ஒரு அழகியை இன்றுவரை எந்த வாயும் முனுமுனுதிருக்காது, உலகின் வரலாற்றை ஒற்றை பெண் மாற்றி இருக்கிறாள், அவளுக்கு அடங்கி இருந்த இரண்டு ஆண்கள் அன்று உலகமே பயந்த இரண்டு மாவீரர்கள் கேட்கவே மனதிற்குள் எழும் பிம்பத்திற்குள் கூட கிளியோபாட்ரா அடங்க மறுக்கிறாள் என்றே தோன்றுகிறது.

கிளியோபாட்ரா போன்ற பெண்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றனர் ஆனால் அவர்கள் அனைவர்க்கும் அகங்காரிகள், தவறான பெண்கள், அல்லது தலைவி என்கிற பட்டம் நாம் கொடுத்திருப்போம், அவர்கள் ஆண்களால் உருவாகவில்லை, ஆனால் ஆண்கள் அவர்களிடம் தஞ்சம் புகுந்திருப்பார்கள், இன்று ஆல்பா male என்று நாம் சொல்லுவது போல இவர்கள் ஆல்பா பெண்கள், ஆல்பா male கொண்டாடும் இந்த சமூகம் இன்று நிச்சயம் ஆல்பா பெண்களை சக மனிதியாக கூட ஏற்காது, ஏனெனில் அவர்கள் தலைவி ஆகும் தகுதி உடையவர்கள் அதனால் அவர்களை வசவு சொற்கலாலும், ஒழுக்க விதிகளாலும் கொன்றுவிடுவோம் அதையும் சிலர் மேலே வந்து நம்மையே வாழ்க கோசமும் போட வைத்திருக்கின்றனர், கிளியோபாட்ரா அந்த வகையை சேர்ந்தவள், சிறந்த ஆட்சியை எகிப்த்துக்கும் கொடுத்து அவர்களது தெய்வமாக வாழ்ந்தவர், எதிரியின் முன் சீக்கினாலும் ராணியாக இறந்தவள்.. வெறும் அழகி மாயக்காரி என்று கடந்துவிட முடியாத பெண் பெருமை கிளியோபாட்ரா என்றே தோன்றுகிறது.. பலவாரு விமர்சனம் வைத்தாலும் அவளது ஆளுமை வியக்கவே வைக்கிறது... all love to this alpha woman ❤️

புத்தகம் : கிளியோபாட்ரா
ஆசிரியர் : முகில்
பக்கங்கள் : 190
பதிப்பகம் : Kindle பதிப்பு

Sunday, 28 January 2024

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் பிராய்ட்

#sigmundfreud #Interpretation of #Dream

#கனவுகளின்_விளக்கம்

இந்த புத்தகம் 1899ல் சிக்மன்ட் பிராய்ட் எழுதிய interpretation of Dreams என்கிற புத்தகத்தின் தமிழாக்கம், அப்படியே பக்கத்திற்கு பக்கம் வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், தமிழ் மக்களுக்கு புரியும்படி அந்த புத்தகத்தை எளிமையாக்கி, அதோடு சிக்மன்ட் அவர்கள் செய்த சில ஆராய்ச்சியின் நம்பிக்கையை அதற்கு பின் வந்த பல விஞ்ஞானிகள் கேள்விக்குட்படுத்தியத்தையும் அதன் சிக்கல்களையும் சேர்த்தே இந்த புத்தகத்தில் சேர்த்திருக்கிறார் நாகூர் ரூமி, அதுதான் இந்த புத்தகத்தையும் சிறந்த மொழிபெயர்ப்பாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

சிக்மன்ட் பிராய்ட் ஏன் உளவியல் துறையில் முக்கியம் என்று யோசித்துபார்த்தால் அவர் சொன்ன அனைத்தும் சரியாக இருந்திருந்தால் அது நியாயமாக இருக்கலாம் ஆனால், பிராயட் சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்றாலும் அவரை ஏன் கொண்டாடுகிறார்கள், காரணம் அறிவியல் அப்படித்தான் வேலை செய்யும். அறிவியல் சிலவற்றை தவறு என்று கூறும் ஆனால் அதற்கு பதிலாக அதுதான் சரி என்று தர்க்கம் செய்யாது.. அந்த தவறான அல்லது முழுமை அடையாத ஒரு கண்டுபிடிப்பை சரி செய்ய அல்லது முழுமைப்படுத்த முயற்சி செய்வார்கள், அப்படித்தான் இதுவும் என்னை பொறுத்தவரை, பிராய்ட் அவர்களின் தியரி ஒரு முழுமை பெறாத தியரி அவ்வளவே.. அவர் புரிந்தவரை இதுதான் சரி என்று முடிவு செய்ய பின்னால் வரும் விஞ்ஞானிகள் அதன் நம்பக தன்மையை சோதிக்கிறார்கள். இதனால் அந்த தியரி இன்னும் வலிமையானதாக மாறுகிறது.

கனவு என்பது என்ன? ஒரு வித மன நோய் அல்லது ஆழ் மனதின் பேச்சாற்றல், கற்பனை திறன் அல்லது, நாம் விரும்பும் வாழ்க்கையை கற்பனையில் அமைத்துக்கொடுகிறது என்றும் சொல்லலாம். கனவுகள் எத்தனை வகைப்படுகிறது.. அத்தனையும் நாம் நினைவில் இருந்து தான் தோன்றுகிறது, அல்லது அதுவே ஒரு உலகத்தை உருவாக்குகிறது என்று பல கேள்விகள் இதை சுற்றி இருக்கிறது, கிட்டத்தட்ட அவற்றிற்கெல்லாம் நியாயம் பேசும் ஒரு தியரியாக இது இருந்தாலும் அது முழுமையடையாமல் இருக்கிறது அதுதான் சிக்கல். இதனால் பிராய்ட் எல்லாவற்றையும் பாலுணர்வோடு தொடர்புப்படுத்தும் போதுதான் பிறரும் இதில் சிக்கல் இருப்பதாக ஆராய தொடங்குகின்றனர், காரணம் அம்மா மகன் உறவில் கூட அவர் பாலுணர்வை மையமாக வைத்து வாதிடுவதுதான் இதற்கு அடிப்படை காரணம்.

பிராய்ட் எல்லா கனவும் நிஜத்தில் நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத அல்லது நாம் விரும்புகின்ற ஒன்றை நமது கனவில் நிறைவேற்றி தருகிறது என்று விளக்குகிறார் இதற்கு விருப்பகனவு என்றும் பெயர் வைக்கிறார். அதே போல சில கனவுகள் நாம் விரும்புவதற்கு எதிராக அமைந்ததாக இருக்கும் அதற்கு பின்னால் பாலுணர்வு செயல்பாடு இருக்கலாம் என்று கூறுகிறார், அதிலும் பெரும்பாலும் அனைத்து கனவுகளும் நிச்சயம் பாலுணர்வு தொடர்புடைய கனவுகள் தான் என்கிறார் அதாவது அது எந்த வயதில் வந்தாலும்.. ஒரு உதாரணத்திற்கு, அப்பா இரக்கவேண்டும் என்று மகனும் அம்மா இறப்பதாக மகளும் கனவு காணுவதற்கு காரணம் மகன் தந்தை இடத்தை தாயின் இடம் பெறவேண்டும் என்கிற ஆசையை கனவு நிறைவேற்றுவதாக கூறுகிறார்..

அதோடு இல்லாமல் கனவுகள் நமக்குள் இருக்கும் ஆழ் மன அபிலாசைகளை காமம் கிரோதம், பெருமை, பொறாமை, போன்ற உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறார், அதாவது ஒருவரை நிஜத்தில் நாம் பெரிதாக மதித்தாலும் உள்ளார அவர்மேல் இருக்கும் பொறாமையோ, கோவமோ, வன்மமோ நம் கனவு காட்டிக்கொடுத்துவிடும் என்று சொல்கிறார். ஆனால் சிக்மன்ட் கனவுகளை தேடி பார்த்து விளக்கம் சொன்னதெல்லாம் அவரிடம் வந்த மனநோயாளிகளின் கனவுகள் இதனால் இவருக்கு பின் வந்த பலர் அவர் நல்ல நிலைமையில் இருக்கும் மக்கள் கனவை விளக்கவோ ஆராயவோ இல்லை, இதன் காரணம் தான் அவரின் ஆராய்ச்சியை முழுமையடையாத ஒரு தியரி என்று பின்வருபவர்கள் சொன்னார்கள்.

இன்னும் பல சுவரசியமான புரியாத கனவுகளை புரிந்துகொள்ள இது ஒரு ஆரம்ப நிலை கையெடாக நிச்சயம் இருக்கும். அறிவியல் மற்றும் உளவியல் சார் துறைகளை விரும்புவோர் படிக்கவேண்டிய மிக முக்கிய புத்தகம் இது.. அதோடு இது உலகின் படிக்கவேண்டிய 5 முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக இது சொல்லப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

புத்தகம் : கனவுகளின் விளக்கம்
ஆசிரியர் : நாகூர் ரூமி (சிக்மன்ட் பிராய்ட் )
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 138
விலை : 188