Wednesday, 13 July 2022

இசையின் முகவரி பறை

79/100

#NaanVijay

நான் விஜய்

புத்தர் கலைக் குழு - buddhar kalaikuzhu

சில வருடங்களுக்கு முன்பு Manimaran Magizhini அண்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அனுபவம் உண்டு, தொடர்ந்து அவருடைய புத்தர் கலை குழுவின் செயல்பாட்டை முகநூலில் தொடர்ந்து கவனித்து கொண்டு வந்திருகிறேன், அந்த இணைப்பு தான் இந்த புத்தகத்தை கையில் எடுக்க முதலில் உந்தியது, சமீப காலமாக சாதியம் சார்ந்த புத்தகங்கள் மிகை படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன், அந்த வரிசையிலையே இந்த புத்தகத்தையும் துறந்தேன், பல புதிய தகவல்களை, ஒரு கலையை பற்றிய அடிப்படை புரிதலை இந்த புத்தகம் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது.

இந்த புத்தகம் மணிமாறன் அண்ணாவின் பயணத்தில் தொடங்கி பறை இசை ஏன் இசைக்க வேண்டும், எங்கு இசைக்க கூடாது, அதன் காரணம் என்ன?, பறைக்கு பின் இருக்கும் சமூக கோவம், சாதியம் என அனைத்தையும் ஒரு எளிய முறை புரிதலுக்கு ஏற்படுத்தி இருப்பது மிக பெரிய எழுத்து வலிமை..

தொடக்கத்தில் வெறும் 6 வகுப்பு பயின்றவனின் எழுத்து என்று அண்ணன் தொடங்கி இருந்தாலும், தொடர்ந்து படிக்கும் போது, ஒரு இடத்தில் கூட அப்படி ஒரு எண்ணம் ஏற்படவே இல்லை, ஒரு தேர்ந்த எழுத்தாளனின் எழுத்தாக முத்திரை பதிக்கிறார், அவரது வாழ்வியலை அவர் எளிமையாக எழுதி கடந்து விட்டாலும், அடுத்த பக்கங்களை கடந்து போகும் போது அந்த பயணத்தின் வரிகளை நமக்கு புரிய வைத்துவிடுகிறார்..

ரெட்டியூர் பாண்டியன் வரலாறு என்பது பறை ஒலியில் கேட்கும் பறை எதிர்ப்பு போராட்டமாகவே கேட்கிறது, இந்த புத்தகத்திற்கு முன்பு இப்படி ஒரு நபரை நான் அறிந்ததில்லை என்பதே நான் வெட்கி கொள்ளும் உண்மை, ஒரு இழி வேலையை எதிர்த்து போராடிய ஒரு மனிதனை இந்த அரசாங்கம் வஞ்சம் வைத்து கொள்ளும் என்னும் கொடூரமும், இசைக்கும் ஒவ்வொரு பறையின் பின்னால் இருக்கும் சாதிய அடக்கு முறையின் கொரமாக உரக்க ஒலிக்கிறது.. பாண்டியனின் கொலை அந்த ஊரில் பறை இசை நிறுத்திவிட்டது வேதனை அளித்தாலும், அதன் பின் இருக்கும் நியாயம் அந்த இசையை விட உயர்ந்ததாக படுகிறது

மரண வீடுகளில் பறை இசைப்பதை அண்ணன் எதிர்ப்பதற்கு பின்னாளான நியாயங்கள் நேர்மையானது, இன்றைய சூழலில் பல நிகழ்ச்சிகளில் பறை இசை ஒலிப்பது அந்த நேர்மையின் தீக்சமாய் கேட்கிறது. கொண்டாட்டத்திற்கான இசையாய் இன்று பறை மாறி இருப்பது இவர்கள் போன்றோரின் ஆக சிறந்த முன்னெடுப்பாளையே சாத்தியம் ஆகிறது.

திரையில் பறை இசை இன்று ஒலிக்க துவங்கி இருப்பது இந்த புத்தகம் புகழுந்தாலும், சினிமா பறை மீது மரணத்திற்கான இசை என்று அங்கீகாரம் இடுவதையும் அந்த அப்பத்தத்தையும் மறைக்கவில்லை என்பது ஒரு எழுத்தாளனின் உண்மையை புடமிட்டு காட்டுகிறது.. அண்ணனின் அந்த நேர்மையான எழுத்துக்கு தனி வாழ்த்துக்கள்.

கானா பழனி அண்ணனின் நினைவு குறிப்புகளும், கானா பாடல்களின் இயல்பயும் சொல்வது, கானாவின் பின் இருக்கும் சமூக பின்னணியும் அதன் பின்னால் இருக்கும் காரணங்களையும் சொல்லிய விதமும், கானா இசை கலைஞர்கள் கடந்து சென்ற பாதையும், என் பல நல்ல பதிவுகளை, அவர்கள் சார்ந்த ஏக்கங்களையும் நமக்கு கொடுத்திருக்கிறார்.

இறுதியில் பல கேள்விகளை கேட்டு அவர் பதில் சொன்ன விதம் பறைபற்றியும், பறை இசை கலைஞர்கள் பற்றிய தகவல்களும் மிக முக்கியமானவை, பல அறிய தகவல்களை அவர் கேள்வி பதிலாய் தொகுத்து கொடுத்திருந்தது மிகவும் எளிமையானதும், பயனுள்ளத்துமாய் இருந்தது.

இதனோடு அடவுகள், சொலவாடைகள், பாடல்கள், என்று இடையில் கச்சேரி கலைகட்டி இருந்தது இந்த புத்தகம், எனவே இந்த புத்தகம் பறைக்கு ஒரு மதிப்புரை என்றே போற்றலாம்.

புத்தகம் : இசையின் முகவரி பறை
ஆசிரியர் : மணிமாறன் மகிழினி
பக்கங்கள் : 143
விலை : 150
பதிப்பகம் : புத்தர் கலை குழு