Sunday, 30 April 2023

மண் சாலை

அழகான மண் சாலை..
வெயிலில் இதமாக காலார
ஒரு நடைப்போடா மனம் ஏங்கியது..

ஊருக்கு உள்ளே செல்லும் சாலை,
நாகரிகத்தை இறுதியில் ஒளித்து வைத்திருந்தது...

அந்த சாலையை கடக்க கணக்கிட்ட நேரம்
அந்த தெருவில் இருப்போருக்கு 10நிமிடங்கள்
என் தெருவில் இருப்போருக்கு 10தலைமுறைகள்

11வது தலைமுறை நான்..
நின்று பார்க்கிறேன்..
என் அப்பன் ஆசை,
என் தாத்தன் ஏக்கம்,
என் பூட்டன் உழைப்பு..

எல்லாம் கலந்து நடக்க சொல்லியது மனம்..
கால் வைத்தால் மரணம்
கால் வைத்தால் சவுகடி
கால் வைத்தால் அபராதம்
கால் வைத்தால் வேலையின்மை
கால் வைத்தால் அவமானம்..

மனம் மட்டும் அப்படியே ஏங்கி கொண்டிருக்கிறது..
சாலையை சுற்றி சுற்றி ஓடினேன்..
சாலையில் கால் வைக்க தைரியம் இல்லை..

சாலை வேண்டுமா படி என்றான் ஒருவன்..
மைல்கள் நடந்து பாடசாலை போனேன்..
ஓரம் உட்கார வைக்கப்பட்டேன்
அடித்து துரத்தப்பட்டேன்
படிக்காது தடுக்கப்பட்டேன்..

இருந்தாலும் சாலையின் மீது ஆசை தீரவில்லை..
எல்லாவற்றையும் தாண்டி படித்தேன்..
படி படியாக படியேறினேன்..

இன்றும் அந்த சாலையில் என் பாதங்கள் பதியவில்லை..
அடிக்க ஓங்கிய கரங்கள் வணக்கம் போட்டது..
துரத்திய முகங்கள் கருணை மனு கொடுத்தது..
இன்றும் சாலையில் என் பாதங்கள் படியவில்லை.

பாட்டனின் உழைப்பு இன்று என் கட்டளையாய் மாறியது..
மண் சாலை தார் சாலையானது..
இன்றும் என் பாதங்கள் பதியவில்லை..

அதிகாரம் வந்தது,
வசதி உயர்ந்தது,
மரியாதை பெறுகியது...
இன்றும் என் பாதங்கள் பதியவில்லை..

ஏன்?

வெறும் பாதங்களில் நடக்க ஆசை கொண்டேன்..
அடித்தனர், துரத்தினர்..
அதனால் இன்றும் என் பாதம் பதியாமல் நடக்கிறேன் என் பூட்ஸ் கால்களோடு..