Wednesday, 2 November 2022

தோட்டியின் மகன் - புத்தக பார்வை

#NaanVijay

நான் விஜய்

#தோட்டியின்_மகன்

1946ல் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய நூல் இது 1952ல் திருமதி.தகழி அவர்களின் அனுமதியோடு சுந்தர ராமசாமி அவர்கள் இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார், அவர் 1952ல் மொழி பெயர்த்தாலும் இந்த கதை 1956ல் தான் தமிழில் முதல் முறையாக அச்சு ஏறியது, சரஸ்வதி என்னும் இதழில் 1957 வரை தொடராக வந்த இந்த நூல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பின் புத்தகமாகியது அதாவது தோட்டியின் மகன் புத்தகம் முதல் பதிப்பு 2000ல் நடந்தது.. இந்த புத்தகம் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது, காரணம் புத்தகத்தின் பெயர், ஒரு நாள் ஒரு கம்யூனிஸ்ட் தோழர் இந்த மொழி பெயர்ப்பை படித்துவிட்டு பல கேள்விகள் கேட்டுவிட்டு கடைசியில் சொன்ன பதில் இந்த புத்தகத்திற்கு வேறு பெயர் வைத்து பதிப்பிடுங்கள் என்பது தான்.. ஒரு கம்யூனிஸ்ட் தோழரே இப்படி சொல்லும் அளவுக்கு இந்த பெயரின் பின்னால் இருக்கும் அரசியல் நமக்கு புரியவைக்கிறது.. இனி கதை பற்றி பார்ப்போம்.

ஆலபுழ நகரில் வசிக்கும் ஒரு தோட்டிக்கு உடல் நிலை மோசமடைய தன்னிடத்திற்கு தன் மகனை அனுப்புகிறார், தோட்டியின் மகன் தோட்டியாகதான் இருக்க வேண்டுமா என்ற பாரத்தோடு அவனும் வேலைக்கு செல்கிறான், அன்றுதான் அந்த ஊர் முதல் முறை ஒரு வித்தியாசமான தோட்டியை பார்க்கிறது, அவன் மற்ற தோட்டிகளை போல் அல்ல, அவன் காசு சேமிக்கிறான், அவனுக்கு எந்த தவறான பழக்கமும் அல்ல, மிக முக்கியமாய் தன் தோட்டி வாழ்க்கை தன்னோடு முடியவேண்டும் என்பதில் அவன் உறுதியாய் இருக்கிறான்,

தன் தகப்பன் இறப்பதும், அதன் பின் ஒரு தோட்டியின் பிணத்திற்கு ஏற்படும் அவமானமும் அவனை உடைக்கிறது, தோட்டியின் மகனின் மகன் தோட்டியாய் இருக்க கூடாது என்று முடிவுகட்டுகிறான்... சொந்த இனத்திற்கு எதிராகுகிறான், பெற்ற பிள்ளையயை தூக்க கூசுகிறான், பிள்ளையை படிக்கவைக்க வேறு பெயரை, பெற்றவர்கள் என்று போடுகிறான் இறுதியில் தன் தொழிலை கூட மாற்றி மரணத்தை தொடுகிறான், இருப்பினும் தோட்டியின் மகன் மீண்டும் தோட்டியாகிறான்..

ஒவ்வொரு பக்கமும் உங்கள் மனதை செதில் செதிலாய் அறுக்கும் எழுத்துக்களை கொண்டது, தோட்டியின் பிணம் கூட இங்கு இந்த பூமியில் அனுமதிக்கபடுவதில்லை, அவன் பிள்ளைக்கு ஒரு நல்ல பெயர் வைத்தால் உலகம் அவனை பார்த்து சிரிக்கும், அவன் நல்ல உடை அணிந்தாலும் தோட்டியென்றால் நாறவே செய்கிறான், எனில் தோட்டி கடைசிவரை தோட்டியாக மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுகிறான், தோட்டியாய் பிறந்தது அவன் தவறில்லை என்ற போதிலும் அது தன் பிள்ளைக்கு தன்னைப்போல நடக்க கூடாது என்று நினைக்க ஒரு தோட்டி தகப்பனுக்கு உரிமை இல்லை.. தோட்டிகள் படிக்க சென்றுவிட்டால் இனி தோட்டி வேலையை யார் பார்ப்பது என்ற கேள்வி வந்திடவே, அந்த கேள்விக்கு பதிலாய் தோட்டி கடைசி வரை தோட்டியாகவே இருக்க வேண்டியுள்ளது..

இந்த கதையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒரு பெயர் இருந்தும் இங்கு மீண்டும் மீண்டும் நான் தோட்டி என்றே எழுத காரணம் இந்த புத்தகம் அந்த பெயருக்காக தான் ஒதுக்கப்பட்டது என்ற வேதனையால், இங்கு யாரும் தோட்டியின் வாழ்க்கையை படிக்க கூட தயாராகவில்லை என்கிற கசப்பு உறுத்துகிறது..

வள்ளியும் சுடலையும் தன் மகனின் எதிர்காலத்தை பற்றி பேசும் பக்கங்கள், தோட்டியின் வாழ்க்கையின் வலிகளை கண்முன்னே நிறுத்துகிறது, என்ன ஆனாலும் அவன் தோட்டியின் மகன்தானே என்ற வார்த்தை சுடலை எப்படி சுக்கு நூறாய் கிழித்திருக்கும் என்பதை நான் உள்ளுர உணர்ந்தேன்.. ஒரு பிள்ளைக்கு அப்பனாய் அந்த பிள்ளையை ஒரு முத்தம் கொஞ்சாமல் கூட இருந்த அந்த அப்பனின் கனவு எவ்வளவு வைராக்கியம் கொண்டது என்று உணரும் போது தோட்டியாய் அவன் அடைந்த அவமானங்கள் கண்முன்னே வந்து போகிறது..

இறுதியில் தோட்டியின் மகன் அவன் இந்த சமூகத்திற்கு எதிரான போரில் இரங்குகிறான், தங்களை எய்த்தவர்களை எதிர்க்கிறான், மரணிக்கிறான், ஆனால் அவன் மரணம் அர்த்தமுடையது, அடுத்த தலைமுறையை உசுப்பகூடியது.. ஆனால் இப்படி மரணித்துதான் இந்த சமூகம் அவர்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? 

ஒவ்வொருமுறையும் எதோ ஒரு காரணத்தால் தோட்டிகள் 40வயது கூட தாண்டாமல் மரணத்தை ஏற்கிறார்கள் அதில் தன் பிள்ளைகளின் குடும்பங்களை நிற்கதியில் விட்டு செல்லும் வேதனைகள் புத்தகம் நமக்கு அப்படியே கடத்துகிறது.. இந்த புத்தகம் இன்னும் பல பதிப்புகளை கடந்து அடுத்த தலைமுறைக்கு கடந்த தலைமுறையின் கொடுமைகளை நிச்சயம் சொல்லவேண்டும்.. அது அவசியம், அது நமது கடமையும் கூட.. 

நல்லதொர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ..!

மகாகவி பாரதி

புத்தகம் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலசுவடு
பக்கங்கள் : 176
விலை : 200

Tuesday, 1 November 2022

கார்பொரேட் கோடாரி - புத்தக பார்வை

104/110

#NaanVijay

நான் விஜய்

எப்பொழுதும் போல் எனது வாசிபிற்கு நெருக்கமான எழுத்தாளர் தோழர். நக்கீரன் அவர்களின் புத்தகம்.. ஒவ்வொருமுறையும் இவரது புத்தகங்களை திறக்கும் போதும் மனம் ஒரு வகை பதற்றதுக்குள்ளகிறது, மனம் ஒரு வலியை சுமக்கிறது.. நமது மண்ணுக்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகங்களை படிக்கும்போது ஏதும் செய்யாமல் நிற்கின்றோம் என்கிற குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

கார்பொரேட் நிறுவனங்களின் லாப வெறிக்கும் எத்தனையோ நாடுகளும், காடுகளும் பலியகிறது, அதை அரசு சாமரம் வீசி நிற்கிறது... நமது நாடு மட்டுமல்ல உலகின் உள்ள எல்லா வளந்த நாடுகளும் வளரும் நாடுகளின் கழுத்தை அறுத்துதான் தன் கோர பசியை தீர்த்துக்கொள்கிறது.

உலக வர்த்தக கட்டிடம் இடிப்பிற்கும் மண்ணின் மரணத்திற்கும் உள்ள தொடர்பில் தொடங்குகிறது இந்த புத்தகம், தன்னை பெரிய அறிவாளியாய் காட்டிக்கொள்ளும் அமெரிக்க விஞ்ஞான மூலை காட்டின் ஒரு மூலையில் வாழும் ஆதிக்குடிகளின் முன்னாள் தொற்றுப்போனது ஒரு செய்தியை ஆணி அடித்தாற்போல் சொல்கிறது.. நமது அறிவியல் அறிவை விட அவர்களின் மண் பற்றிய அறிவு மேலானது..

வெறும் பறவை எச்சத்திற்காக பல நாடுகள் சண்டையிட்டதும் காத்திருந்து வாரி சென்று ஒரு நாட்டை காவு வாங்கியதும் மலைக்க வைத்த செய்தி.. நைரேட் கொடுக்கும் விவசாய மண்ணிற்காக ஏற்பட்ட போறும் அது தொடர்ந்திருந்தால் ஏற்படவிருந்த அபாயமும் பயமுறுத்துகிறது

பச்ச மாமா சாக்ர அறிவு வியப்புன் உச்சம், அமெரிக்க அறிவியல் மூலைகளால் அரியமுடியாததை அவர்கள் நிகழுத்தி காட்டிகொண்டிருந்தனர், அவர்களை நம்பாமல் அந்த அரசு அமெரிக்காவிடம் கை ஏந்தியது கேவலத்திலும் கேவலம்,

உயிர் எரிபொருள் என்னும் நிலத்தின் மீதான உழவர் மீதான வன்முறை ஒரு அதிகார வெறிதான்.. நாட்டில் சோற்றுக்கு கிடைக்க வேண்டிய நிலம் நாளை பிடுங்கி வண்டிகள் ஓட மட்டும் பயன்படபோகிறது என்பது இன்றே சிந்தித்து எதிர்வினை ஆற்ற வேண்டிய விஷயம்..

உயிர் எரிபொருளுக்கு அடுத்து உயிர் நெகிழி என்னும் அடுத்த ஆபத்தையும், தன் உண்மையையும் விளக்கிய கட்டுரை நம்மை இந்த விளம்பர உலகம் எப்படியெல்லாம் ஏமான்றுகிறது என்பதை திரைவிலக்கி காட்டுகிறது.. பசுமையை காக்கிறோம் என்ற பெயரில் மண்ணை அழித்து, உழவை கெடுத்து உணவில்லா ஒரு நிலையை உருவாக்கும் இப்படிப்பட்ட வளர்ச்சிகள் தேவையில்லாத ஆணிகள்..

உலகின் செயற்கையாய் உருவாக்கபட்ட ஒரு பாலைவனம் அது கடலைவிட 3மடங்கு உப்பு தன்மை கொண்டிருப்பதும் அதனால் பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் விவசாய நிலம் மலடாவதும் ஏதேச்சையாய் நடந்தது போல காட்டப்பட்டாலும் அதற்கு பின் இருக்கும் உண்மை பருத்தி உற்பத்தி.. பணப்பயீர் என்கிற பெயரில் நடக்கும் அதிகார தாண்டவம், அதிலும் இதெல்லாம் நடப்பது தன்னை எளிய மக்களின் நாடக அடையாளபடுத்திகொண்ட சோவியட் ரசியாவில்.. எந்த கொள்கை ஆனாலும் காசுக்கு முன் எதுவும் நிற்காது என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய சான்று..

ஊர் மயமாக்கள் என்ற பெயரில் விளையும் மண்ணில் இருந்து அதன் பூர்வ குடிகளை துரத்திவிட்டு, கார்பொரேட் கூட்டிக்கொடுக்கும் கேடுகெட்ட உலக அரசாங்கங்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யவேண்டும் என்பதே புரிவதில்லை.. உலகத்தை பட்டினி போட்டுவிட்டு இவ்வளவு வளர்ச்சி அடைந்து என்ன செய்யபோகிறோம்.. இன்று காசுக்காக எல்லாவற்றையும் அழித்துவிட்டு நாளை அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான உலகை பரிசளிக்க போகிறோம் என்ற கேள்விகள் உள்ளுற உறுத்துகிறது..

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்..

மகாகவி . பாரதி

புத்தகம் : கார்பொரேட் கோடாரி
ஆசிரியர் : எழுத்தாளர் நக்கீரன் 
பக்கங்கள் : 70
விலை : 70
பதிப்பகம் : காடோடி