Tuesday, 10 March 2015

காதல் ஒரு கால பயணம்

காதல் – காலம்
        





         “காதல்” இன்றைய ஒவ்வொரு இளைஞர்களுக்குள்ளும் ஏதோ ஒரு பரிணாமத்தில் ஒளிந்திருக்கும் ஓர் அற்புத விடயம். ஏன் காதலிக்க வேண்டும்? எதற்காக காதலிக்க வேண்டும்? எல்லாவற்றையும் தாண்டி எப்படியாவது காதலித்தே தீர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி காணபடுகிறது. காதல் இந்த உணர்வு மட்டும் அல்ல காதல் என்கிற வார்த்தையும் பல்வேறு காலங்களில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் பெற்று உருவாகி இருக்கிறது.
         
       சங்ககால தமிழ் இலக்கியத்தில் காதல் என்னும் வார்த்தை காணப்படவில்லை என்பதுதான் உண்மை, பின்பு எப்படி அழைத்தார்கள் என்று சிந்தித்தால்..! கிடைக்கும் பதில் ‘காமம்’. இன்று காமமும், காதலும் வேறு, வேறு தளங்களாக பார்கபட்டாலும் சங்ககாலத்தில் இவை இரண்டுமே, ஒற்றை அர்த்தம் உடையவையே...! ஆணுக்கும், பெண்ணுக்குமான கூடலை குறிக்க தோன்றிய வார்த்தைதான் காமம். ஆனால் பிற்காலத்தில் தோன்றிய, நம் தமிழ் கவிகள் காமம் என்பதை இன்னும் பிற உணர்வுகளுடன் கூட்டி அழகுற கூற வேண்டும் என்று முடிவு செய்து, ஊடலும், கூடலும் ஒன்று கூடி, ஆறாம் சார்ந்த அன்பையும் பிணைத்து, இரு மனங்களுக்குள் ஆட்பட்ட தூய அன்பை ஒரு முகபடுத்தி கொணரப்பட்ட வார்த்தை தான் “காதல்”
         
         இந்த காதல் எனும் வார்த்தையை  போலவே அது கொண்டுள்ள உணர்வுகளும் காலத்தால் மாறிக்கொண்டே வந்தது. ஆதி தமிழனுக்கு காதல் என்பது காமம் என்னும் பொருளோடு கூடல் என்னும் நிலையில் முடிந்தது, பிற்கால தமிழனுக்கு காதல் தூய்மையான அன்புடன் கூடிய நேசமாக பிரதிபலித்தது, அக்காலத்தில் அநேகமாக பாலிய விவாகங்கள் செய்யப்பட்டதால் காதல் பெரும்பாலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் அழகிய உணர்வு பகிர்பாய் அமைந்தது. அதிலும் பெண்களிடம் குடிகொண்ட காதல் உணர்வு அளப்பற்றது.
         
        மீண்டும் காதல் சுதந்திரத்திற்கு முற்ப்பட்ட காலத்தில் இன்னொரு பரிமாணத்தை எட்டியது. இன்னும் சொல்லப்போனால் அப்பொழுதுதான் இன்றைய காதல் என்னும் முறைமைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. அக்காலத்தில் காதல் தனக்கான வாழ்கை துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு சிறந்த வழியாக புது உருவத்தை எட்டியது. ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் திருமண ஏஜென்டாக மாறியது காதல், அதிலும் நன்கு புரிந்துகொண்டு தங்களுக்கான கட்டமைப்புக்குள் அமைக்கப்பட்ட காதலாய் உருவெடுத்தது.
        
 பின்பு 90களில் திரைப்பட காதல் இன்னொருவகையில் புரட்சிக்காதல் என்றும் சொல்லலாம், இக்காலக்காதல் சாதிகளை, மதங்களை உடைத்தது, ஏழை, பணக்கார வேற்றுமைகளை தகர்த்தது, உண்மையில் ஆரோக்யமான காதல் என்றே சொல்லவேண்டும், இன்று நடக்கும் பெரும் கலப்பு திருமணங்களுக்கு அடிக்கல் நாட்டியது இக்காலக்காதலே ஆகும். இதற்கு அடுத்து 2000ம் ஆண்டில் இருந்து தொற்றி கொண்டது நாகரிக காதல், இணையத்தின் பயனால் எல்லைகளை உடைத்து நாடு கடந்து காதல் வளர்ந்தது கூடவே இக்காலக்காதல் பெண்களின் பாதுகாப்பை மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை ஒலியாக மாற்றிகாட்டியது.
       
  இறுதியாக இக்காதல் நவீன காதல், ‘பிடிச்சா பழகுவோம்..! இல்ல நண்பர்களா இருந்துப்போம்...!’ என்கிற யதார்த்த காதல்..! மீண்டும் சங்ககாலத்தைப் போலவே காதல் என்னும் வார்த்தை காமமாய் மாறிகொண்டிருக்கும் கன்றாவி காதல், காதல் என்பது இன்று அடைந்துள்ள வளர்ச்சி என்பது அபாயகரமானது நான்கு பையன்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் பெண், பத்து பெண்களுக்கு ஆசையுட்டி ஏமாற்றும் ஆண் என்று நம் பண்பாட்டை சீரழிக்கும் காதல்...!
உங்க காதல் எந்த காலத்திற்கு உரியது....?

  -நான் விஜய்

  

1 comment: