தீ
அறிவிப்பு :
இந்த கதையில் வரும் பெயர்கள் (ஜாதி பெயர்கள் உட்பட), வாழுமிடம், அமைப்புகள் என அனைத்தும் என் கற்பனையே... நம்புனா நம்புங்க...
யானை கொண்டு போரடித்த ஊர் அது, ஒரு காலத்தில் பெரிய வரலாறுகளை சுமந்து அதன் எச்சம் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஊர்... அந்த ஊரின் வட்டத்திற்குள் ஒருமூலையில் நாம் போகப்போகும் ஊரும் இருக்கிறது.. சுற்றி எங்கும் அழகு பொங்கும் அலாதியான மனம் எங்கும் இன்பம் பேரிடும் அற்புதமான காட்சிகள்... எந்த கதைகளை கேட்டு இங்கு வரப்பில் உயர்ந்திருக்கும் இந்த நெற்கதிர்கள் தலையாட்டுகிறதோ தெரியவில்லை, அப்படி ஒரு ஆளாபனை, எங்கும் பச்சை உடுத்தி நிலமகள் அழகுற பார்க்கிறாள்... சூரிய வீச்சு பார்வையில் அவள் அழகு இன்னும் மிளிர்கிறது.. அடடே நிலமகள் அழகில் இங்கையே நின்றுவிட்டோமே.. இவள் இப்படி அழகுற செழித்திருக்க யார் காரணம், அந்த விவசாயிகள் தானே வாருங்கள் அவர்களை தான் பார்க்க போகிறோம்... இந்த மண்ணை பொன்னாக்கியா அந்த அற்புத கரங்களை தேடிப்போவோம்
அதோ ஒரு கோவில் அருகே பெரியவால் தெரு... நீங்கள் பிறப்பில் தலையில் பிறந்திருந்தால் அங்கே நுழைந்து எளிதில் பின்னால் உள்ள குடியான தெருவில் போய்விடலாம் இல்லையென்றால் என்னோடு கொஞ்சம் இப்படி சுற்றி வாருங்கள், அந்த கோவில் பெரியவால் தெருவின் முனையில் இருக்கிறது.. ஒரு 500 வருடத்திற்கு முன்பு இந்த ஊரின் கடைசியில் இருக்கும் சேரி மக்களால் கட்டப்பட்டது, அப்போது இவர்கள் பக்கத்து ஊர், வெள்ளத்தில் தங்கள் ஊரை இழந்து இங்கு வந்து குடியேறிய போது, யாரும் மதியாமல் கிடந்த இந்த சிவன் சிலைக்கு உயிர் கொடுத்து கோவில் எழுப்பி அருகில் இருந்துகொண்டனர், சிலநாட்கள் பின்பு பெரியவால் ஒருவர் இந்த பக்கம் பசியோடு யாசகம் கேட்க வந்தபோது, இந்த கோவிலை பார்த்துக்கொள்ளும் பணியை பெற்றார், பின்பு கோவில் அருகே தன் இருப்பை நிறுத்திக்கொள்ள, அங்கிருந்த சேரி மக்கள் கொஞ்சம் தள்ளி தங்கள் குடிலை போட்டனர்... அதன் பின் அந்தப்பக்கம் வியாபாரம் பாக்க வந்த ஒரு கூட்டம், இவர்கள் விளைவிப்பதை விற்க அவர்களும் அங்கையே இருப்பை ஏற்படுத்தி கொண்டனர், அடிக்கடி பயணம் செய்யவேண்டிய அவசியம் இருப்பதால் கோவிலுக்கு அடுத்த கட்டில் தங்கள் இருப்பை சேரி மக்கள் கொண்டே ஏற்படுத்தி கொண்டனர்... இதனால் இன்னும் பின்னால் இந்த மக்கள் தள்ளிப்போய் வாழ ஆரம்பித்தனர்.
சில வருடங்கள் போன பின்பு தங்கள் வியாபாரம் செழிக்க அதன் கணக்கு வழக்குகளை பார்க்க பெரியவாலை பயன்படுத்திகொண்டார்.. பின்னர் பெரியவாளின் அறிவுறுத்தலின் படி, சேரி கூட்டத்தில் நல்ல வாட்ட சாட்டமான சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை காவலுக்கும், வசூலுக்கும் பயன்படுத்தி கொண்டார்.. சில வருடங்களில் கடும்பஞ்சம் ஏற்பட சேரி மக்கள் வியாபாரிகள் எனப்படும் குடியானவர்களை தேடி உதவி கேட்க, பெரியவாலின் அறிவுரைப்படி அதில் சிலரை தங்கள் பண்ணையில் கூலியாளாய் சேர்த்துக் கொண்டார், மிச்சம் நிலம் வைத்திருக்கும் மக்களிடம் அதிக வட்டி போட்டு கட்ட முடியாத நிலைமை உண்டுபண்ணி அவர்கள் நிலத்தையும் வாங்கிகொண்டனர்.. அதோடு அவர்கள் எல்லாரும் கடவுளின் காலில் பிறந்தவர்கள் என்பதை அவர்களுக்கு புரியவைத்து அவர்கள் இனி ஊருக்குள் வர கூடாது என்றும், இனி தங்களை ஆண்டே என்று கூப்பிட வேண்டும் என்றும் கட்டளையிட்டனர், காலில் பிறந்த கூட்டமும் சம்மதித்தது..
அதோடு அவர்களுக்கு கோவிலில் நுழையும் உரிமையும், ஆண்டை இருக்கும் தெருவில் முகப்பில் நடக்கும் அதிகாரமும் பறிக்கப்பட்டது, அதோடு கால்நடைகள் வளர்க்கும் உரிமையும் பறிக்கப்பட்டது.. ஏனெனில் அவர்கள் கால் நடைகள் ஆண்டேவின் நிலத்தில் மெய்ந்து விடுமாம், அது பெரிய தீட்டாகிவிடும், அதனால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.. காலில் பிறந்த கூட்டமும் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தலையாட்டியது.. இதற்கு காரணம் இவர்களின் பிறப்பை இறைவன் இப்படிதான் படைத்தான் என்று பெரியவால் சொல்ல, ஆண்டேக்களும், அடிமைகளும் நம்ப துவங்கினர்..
இதுதான் இந்த கிராமமும், மக்களும் உருவான கதை, கதைக்கேட்ட அவசரத்தில் குடியான தெருவில் நுழைந்து விடாதீர்கள், அதற்கு நீங்கள் கடவுளின் மார்பில் பிறந்த கூட்டமாய் இருக்கவேண்டும்.. பெரியவால் உத்தரவு இது... ஒருவேளை நீங்கள் அந்த கூட்டமும் இல்லை என்றால் இன்னும் கொஞ்சம் சுற்றி ஆண்டேக்களின் வீடுகளின் பின்புறம் சற்று ஒதுங்கி செல்லும் இந்த சகதி பாதையில் சென்றால் அதோ தூரத்தில் தெரிகிறது ஒரு பராதி கூட்டம், அதுதான் இந்த பூமியை ஊராக்கி, மண்ணை பொன்னாக்கிய பூர்வக்குடி, இன்று அடிமை கூட்டம், இந்த கூட்டத்தின் கதையைதான் இனி நாம் பார்க்க போகிறோம்... இந்த அடிமைகள் தாங்கள் யாரென்று உணர்ந்தால் என்ன ஆகும், அதற்கு ஆண்டேக்களும், பெரியவால்களும் என்ன செய்வார்கள் என்பதை தொடர்ந்து வாசிக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment